குடல்வால் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

குடல்வால் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

அப்பெண்டிக்ஸ் என்று சொல்லப்படும் குடல்வால் பகுதியில் தொற்று ஏற்பட்டாலோ, அதில் வீக்கம் ஏற்பட்டாலோ (அழற்சி), குடல்வாலை முழுமையாக அகற்றிவிடுவதே குடல்வால் அகற்று அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை முறையை அப்பென்டக்டமி (Appendectomy) என்று மருத்துவத்தில் அழைக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சை முறையும், லேபரோஸ்கோபி முறையில் துளையிட்டே செய்துவிடுகிறார்கள். வயிற்றின் அடிப்பகுதியை கீறி திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

குடல்வாலில் ஏன் அழற்சி ஏற்படுகிறது?

குடல்வால் எதனால் அழற்சிக்கு ஆளாகிறது என்பது இன்னும் புரியாத புதிர் தான். ஆனாலும் குடல்வால் பெருகுடலோடு சேரும் இடத்தில் உள்ள வாய்ப்பகுதியில் ஏற்படும் அடைப்பே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அடைப்பு பெருகுடலில் காணப்படும் மலம் காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது. மலம் கலந்த இந்த பொருட்கள் குடல்வாலுக்குள் புகுந்து, வெளியேற வழியில்லாமல், அது பல்கிப்பெருகி அழற்சிக்கு ஆளாகிறது என்று நம்பப்படுகிறது. இந்த அழற்சியானது, குடல்வாலின் சுற்று தசைகளில் அழுந்தி நமக்கு தாங்கமாட்டாத வலியை ஏற்படுத்துகிறது.

குடல்வால் அழற்சி ஏற்பட மற்ற காரணங்கள்

இரண்டாம் நிலை குடல்வால் அழற்சி

பொதுவாகவே இரைப்பை உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாக்டீரியா, வைரஸ், போன்ற கிருமிகளால் பாதிப்படைகின்றன. இந்த பாதிப்பு இயல்பாகவே எல்லோருக்கும் நிகழும். மிக அபூர்வமாக இந்த பாதிப்பு குடல்வாலுக்கும் ஏற்படலாம். இந்த வகை பாதிப்பே இரண்டாம் நிலை குடல் அழற்சி என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் நிலை என்று சொல்லும்போதே, கிருமிகளின் தொற்று வேறு இடங்களில் இருந்து குடல்வாலுக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று யூகிக்கலாம். ஆக முதல் நிலை தொற்று வயிற்றின் வேறு பகுதியில் நிகழ்ந்திருக்கிறது என்று கொள்ளவேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடே இந்த நிலை வரக்காரணம் என்று கூறலாம்.
இரண்டாம் நிலை குடல்வால் அழற்சி அபூர்வமாக ஏற்படும் என்றாலும், ஆரம்ப நிலையில் இது இருந்தால் இதனை ஆன்டிபையாடிக் (antibiotic) மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம். தொற்று முற்றியிருந்தால், அறுவை சிகிச்சை மூலம் குடல்வால் அகற்றம் செய்யப்படவேண்டியது தான் ஒரே வழி.

மலம் கெட்டித்து போதல் (Fecal Impaction)

குடல்வால் அழற்சி என்றாலே, குடல்வாலின் உள்ளே மலம் மாட்டிக்கொள்வதும், அதனால் ஏற்படும் அழற்சி தான். இயல்பாகவே ஒருவருக்கு அடிக்கடி மலம் கெட்டித்து போனால், அநேகமாக குடல்வால் அழற்சியில் கொண்டுபோய் முடியலாம். மலம் கெட்டித்துப் போகும்போது காரை போன்று இறுகி குடலை விட்டு மலம் வெளியே தள்ள இயலாமல் அங்கேயே இருக்கும். இதனால் மலம் வெளியேற முடியாமல் நாள்பட தங்கிவிடுவதே மலம் கெட்டித்துப் போதல் என்கிறோம்.
மலம் கெட்டித்து போதலுக்கான முதல் காரணம் மலச்சிக்கல் தான். தவறான உணவு பழக்கவழக்கங்களால் தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், நிறைய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, போதுமான ஊட்டத்தை உடலுக்கு வழங்காமல் இருப்பது, செரிமானப் பாதையில் நாள்பட்ட கோளாறு, சில மருந்துகள், அதிக நாள் மருத்துவமனையில் இருப்பது, படுக்கையிலேயே நாளை கழிக்கும் நோயாளிகள், இந்த காரணங்கள் எல்லாம் நாள்பட்ட மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. இந்த நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கெட்டித்து போகும் நிலைக்கு தள்ளுகிறது. இந்த காரணங்கள் பொருந்திப் போகும் எல்லோருக்கும் குடல்வால் அழற்சி ஏற்படும் சாத்தியக் கூறுகள் மிக அதிகம்.

மருத்துவர் மாறனின் குடல்வால் அழற்சி பற்றிய காணொளி

கீழ்காணும் காணொளியில் மருத்துவர் மாறன் அவர்கள் குடல்வால் அழற்சி பற்றி பேசுகிறார். இந்த குறுகிய காணொளியில் குடல்வால் உறுப்பை பற்றியும், குடல்வால் அழற்சி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசுகிறார்.
 

குடல்வால் அழற்சி யார்யாருக்கெல்லாம் அதிகமாக ஏற்படுகிறது?

– பத்திலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டோருக்கே அதிகமாக குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது, ஆனால் குறைந்த அளவே ஏற்படுகிறது.
– மரபு காரணமாகக் கூட குடல்வால் அழற்சி ஏற்படலாம். மலச்சிக்கல் தான் பிரதான காரணமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

குடல்வால் அழற்சி ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் முதலில் தோன்றும்?

– தொப்புளுக்கு அருகாமையில் சன்னமான வலி ஏற்படும். செரிமானம் தொடர்புடைய வலிபோலவோ அல்லது வயிற்றுப்புண் (ulcer) ஏற்பட்டால் வரும் வலிபோலவோ முதலில் இருக்கும்
– மிதமான ஜுரம்
– வாந்தி

குடல்வால் அழற்சி ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் அடுத்ததாகத் தோன்றும்?

– அடி வயிற்றின் வலதுபுறத்தில் வலி தோன்றும்
– வலி மிகுந்தும், பிடிப்பது போன்றும் இருக்கும்
– அதிக ஜுரம்
– வாந்தி
– ரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் – உடலில் சேர்ந்துள்ள கிருமிகளை எதிர்த்து உடல் போராடுவதால் இந்த அதிகரிப்பு நிகழும்.

குடல்வால் அழற்சி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது

பொதுவாக நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால், ஒரு பொதுநல மருத்துவரை தான் நாடுவோம். அறுவை சிகிச்சை நிபுணரை நாடமாட்டோம். அதிக அனுபவம் உள்ள பொதுநல மருத்துவர், வயிற்று வலி என்றவுடன் உடலை நன்றாக பரிசோதித்து பார்ப்பார். அப்படி பரிசோதிக்கும்போது அவருக்கு வயிற்று வலியின் காரணம் குடல்வால் அழற்சியாக இருக்கலாம் என்று சந்தேகம் வந்தால், உடனே அறுவை சுகிச்சை நிபுணரை பார்க்கும்படி பரிந்துரைப்பார்.
சில தருணங்களில் அன்டிபயாடிக் ஊசிகள் மூலம் வலியை மட்டும் குணப்படுத்தி மூல காரணத்துக்கு தீர்வு இல்லாமல் செய்ய நேரலாம். இது பெரிய சவால் தான். அதனால் குறிப்பிட்ட வயிற்று வலி ஏற்படுமானால், வயிறு மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணரை (gastro surgeon) நாடுவதே சாலச்சிறந்தது.
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அன்டிபையோடிக் மருந்துகள் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதையும், அவை எப்படி குடல்வால் அழற்சியை குணப்படுத்துவதை பாதிக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதன் இணைப்பை கீழே கொடுத்துள்ளோம்.
வயிறு மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் உடலை நன்றாக ஆய்வு செய்வார். குடல்வால் அகற்ற அறுவை சிகிச்சைகள் பல செய்து தேர்ந்த, அனுபவம் படைத்த நிபுணர்களால், உடலை நன்றாக ஆய்வு செய்யும் போதே குடல்வால் அழற்சி இருக்கிறதா, இல்லையா என்று சொல்லிவிட முடியும். ஆனாலும் அதனை உறுதிப்படுத்த சிடி ஸ்கான், அல்ட்ராசவுண்ட் போன்ற முறைகளை பரிந்துரைக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூன்று வகையான சூழலை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது படம் இயல்பான, ஆரோக்யமான குடல்வாலை காண்பிக்கிறது, இரண்டாம் படம் அழற்சி ஏற்பட்ட குடல்வாலை காண்பிக்கிறது. மூன்றாவது படம் அழற்சி அதிகமாகி வெடித்த குடல்வாலை காண்பிக்கிறது.

குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதற்கு நேரும் சவால்கள்

குடல்வால் அழற்சியால் ஏற்படும் அறிகுறிகளான, பசியின்மை, அடிவயிற்றின் வலது புறத்தில் ஏற்படும் வலி, வாந்தி, ஆகியவை பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை. அழற்சி உடைய பாதி பேருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுவதே இல்லை என்பதே நிதர்சனம். பெண்களை விட ஆண்களுக்கே அறிகுறிகள் தென்பட்டு குடல்வால் அழற்சி சுலபமாக கண்டுபிடிக்கப் படுகிறது என்று கூறுவார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்

அடிவயிற்றின் வலது புறத்தில் ஏற்படும் வலி மற்ற சுகவீனங்களால் ஏற்படும் வயிற்றுவலியோடு ஒத்துப்போவதால் தான் குடல்வால் அழற்சியை பெண்களுக்கு கண்டுபிடிப்பதில் உள்ள பெரிய சிக்கல் ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, கருப்பையில் கட்டி, சிறுநீரகத்தில் கல், போன்ற சிக்கல்கள் குடல்வால் அழற்சியால் ஏற்படும் அறிகுறியை ஒத்தே இருக்கும். இவை எல்லாம் மருத்துவரை குழப்பி சரியான கண்டுபிடிப்பை செய்ய சவாலாய் அமையும். ஆக குடல்வால் அழற்சி இல்லை என்று அறுதியாக சொல்ல ஒரு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை முறை துல்லியமாக கைகொடுக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்

சிறு குழந்தைகளால் உடலில் எங்கே என்ன மாதிரியான வலி ஏற்பட்டுள்ளது என்று கூறத் தெரியாது. பொதுவாக வலி என்றால் குழந்தை அழும். அதனால் குழந்தைகள் நல மருத்துவர் சரியானபடிக்கு குழந்தைகளின் வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக ஆகிவிடுகிறது.
குழந்தைகளுக்கு குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பது எப்படி சிக்கலானது என்று ஒரு கட்டுரையை முன்பு எழுதியிருந்தேன். அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.springfieldwellnesscentre.com/appendicitis-children-challenges-treatment/

குடல்வால் அழற்சியை நீக்கும் மருத்துவம்

ஒருக்கால் குடல்வால் அழற்சி தற்போது தான் ஏற்பட்டுள்ளது, வீக்கம் பெரிதாக இல்லை என்று அல்ட்ராசவுண்ட் அறிக்கை இருந்தால், சாதாரண அன்டிபயோடிக் (antibiotic) மருந்துகளே அதற்கு போதுமானதாகவே இருக்கும் என்று ஆய்வுகள் பல கூறுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை வேண்டுமா, வேண்டாமா என்பதை கண்டிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர் (gastro surgeon) தான் முடிவு செய்யவேண்டும். ஒருக்கால் அன்டிபயோடிக் (antibiotic) மருந்துகளே இப்போதைக்கு போதும் என்று முடிவு செய்திருந்தாலும், பின்னாளில் உங்களுக்கு குடல்வால் அழற்சி திரும்ப ஏற்பட்டு, அறுவை சிகிச்சை நிலைக்கு போகும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் லேபரோஸ்கோபி (laparoscopy) முறைகள் பல அறுவை சிகிச்சை முறைகளை சுலபமாக்கிவிட்டன. எளிதில் குணமாகி இரண்டு நாட்களில் வீட்டுக்கு போய்விடலாம்.

குடல்வால் அழற்சிக்கு மருத்துவம் செய்யாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

குடல்வால் அழற்சிக்கு எந்த மருத்துவமும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால், வீக்கம் அதிகமாகி குடல்வால் வெடிக்கும் நிலைமை கூட ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் “பெரிடோநிடிஸ்” (Peritonitis) என்ற நிலைக்கு கொண்டுபோய் வைத்துவிடும். குடல்வால் வெடித்தால் அதனுள் இருக்கும் மலக்கழிவுகள் இரைப்பையின் வெளிப்பகுதியில் எல்லாம் வழிந்து, நோய் தொற்று ஏற்பட்டு, அது ரத்தத்தில் கலந்து,  அப்படியே செப்டிக் நிலைக்கு உடலை கொண்டுபோய்விடும். இது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

குடல்வால் வெடித்தால் நேரும் அறிகுறிகள்

– வயிறு கல் போன்று இறுகிவிடும்

– அதிக ஜுரம்

– அதிக வாந்தி

– அதிக வயிற்று வலி

– செப்டிக் நிலைக்கு நோயாளி சென்றால் உடல் நீலப்படும்

இந்த நிலைக்கு குடல்வால் அழற்சி சென்றால் உடனே அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு. உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

குடல்வால் வெடித்தால் என்ன ஆகும் என்று தனியாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளோம். அதனை இங்கே சென்று வாசிக்கலாம்.

http://www.springfieldwellnesscentre.com/appendix-operation-need-in-tamil/

கட்டி – குடல்வால் வெடித்தால் ஏற்படும் இன்னொரு சிக்கல்

குடல்வால் வெடித்தால் ஏற்படும் இன்னொரு சிக்கல், வெடித்த இடத்தில் உருவாகும் கட்டி. கட்டி என்றால் பொதுவாக சீழு கோர்த்துக்கொள்ளும். இந்த கட்டியிலும் அதுவே நிகழ்கிறது. உடலின் எதிர்ப்பு சக்தி பலமாக செயல்படுவதால் இந்த கட்டி ஏற்படுகிறது.

கட்டிக்கு மருத்துவம் பொதுவாக அண்டிபயொடிக் மருந்துகளை கொடுப்பது தான். ஆனால் அதற்கு முன்னர், அறுவை சிகிச்சை செய்யும்போது இந்த கட்டியில் உருவாகியுள்ள சீழை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகற்றி விடுவார்கள். இது குடல்வால் அகற்றும் அறுவை சிகிச்சையில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் வயிற்றுப்பகுதியை சுத்தமாக்கும் ஒரு நடைமுறை என்று கூட கூறலாம்.

குடல்வால் வெடித்தால் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை நடைமுறைகள்

நோயாளியின் உள் வயிற்றுப் பகுதியில் மலமும் மற்ற தொற்று ஏற்படுத்தும் கசடுகளும் வழிந்து இருக்கும். இந்த கசடுகள் மிகவும் சுத்தமாக அகற்றப்படுகிறது. இந்த கசடுகளில் இருந்து நம் உள் வயிற்றுப்பகுதி விடுபட்டு சுகாதாரமாகவும். தூய்மையாகவும் இருக்க வேண்டும். இதனை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர் உறுதி செய்வார். கட்டி கோர்த்திருந்தால் அதனை அகற்றி, அந்த இடத்தையும் சுத்தமாக வைக்க ஆவன செய்வார்.

உள் வயிற்றுப் பகுதி கனக்கச்சிதமாக தூய்மையாக்கப் பட்டு முடிந்தவுடன், அறுவை சிகிச்சை நிபுணர் வெடித்த குடல்வாலை அகற்றும் வேளைகளில் ஈடுபடுவார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தவுடன் நோயாளிக்கு கொடுக்க வேண்டிய அண்டிபயொடிக் மருந்துகளை கொடுத்து அவரை கவனமாக பார்த்துக் கொள்வார்.

குடல்வால் அழற்சி வராமல் தடுக்க முடியுமா?

முடியாது என்று தான் சொல்லவேண்டும். யாருக்கும் குடல்வால் அழற்சி வரலாம் என்ற நிலை இருப்பதாலும், இன்ன காரணங்களால் தான் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது என்று உறுதியாக சொல்லமுடியாது என்பதாலும், குடல்வால் அழற்சி வராமல் தடுக்க முடியாது. பொதுவாக மலச்சிக்கல் இருக்கும் இளைய வயதினருக்கே  குடல்வால் அழற்சி பெரும்பாலும் ஏற்படுகிறது.

அதனால் அதிக நார்ச்சத்து உடைய உணவுகளை அதிகம் உண்டால் குடல்வால் அழற்சி வராமல் ஒரு வேளை தடுக்கலாம். முருங்கை, போன்ற கீரை வகைகளிலும், காரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளிலும், வாழைப்பழம், போன்ற பழங்களிலும், வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களிலும், அதிகமான நார்ச்சத்து காணப்படுகிறது. இம்மாதிரியான உணவு வகைகளை தாராளமாக உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகள் என்னென்ன என்பதில் விழிப்புணர்வுடன் இருங்கள். உணவுகளை பதப்படுத்த பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், நிறமிகள், இவை எல்லாம் உடலுக்கு தீங்கு இழைக்கும் சக்தி வாய்ந்தவை. இந்த பொருட்கள் அதிகம் காணப்படும் குப்பை உணவுகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

நாம் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லவேண்டியுள்ளது. நல்லபடியாக உணவுப் பழக்கவழக்கத்தை கடைபிடித்தாலும் குடல்வால் அழற்சி வராமல் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால் குடல்வால் அழற்சி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.

குடல்வால் அகற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். மாறன் அவர்களின் கருத்து

குடல்வால் அழற்சி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று மருத்துவர் மாறன் நம்மை எச்சரிக்கிறார். குடல்வால் அழற்சி ஏற்பட்டு அதனை உடனடியாக கண்டுபிடித்தால் அதனை இலகுவாக குணப்படுத்தி விடலாம் என்று கூறுகிறார். எது எப்படி இருந்தாலும், குடல்வால் அழற்சிக்கு நிரந்தர தீர்வு என்றால் அது குடல்வால் அகற்று அறுவை சிகிச்சை மட்டுமே என்பதை அவர் தெளிவாகவே சொல்கிறார்.

Dr Maran is an experienced Surgeon in the field of Gastro-enterology. He specializes in Advanced laparoscopic Surgery procedures of the gastro-intestinal (GI) tracts. Dr. Maran is also a leading Bariatric Surgeon in Chennai and has a penchant for addressing problems concerning Obesity.

At Springfield Wellness Centre, we diligently recognize the value of every individual. We are constantly guided by our qualified criterion of providing an overall wellness to the patients and peace of mind to the next of kin over and above the traditional cure – Our Mission Statement

Dr Maran is a qualified Surgeon in the field of Gastro-enterology. He is a leading Bariatric Surgeon who also specializes in Advanced Laparoscopic Surgery procedures of the gastro-intestinal tracts. He has penchant for addressing problems concerning Obesity